சனி, அக்டோபர் 15, 2016

தமிழ் கற்க உதவித்தொகை

பழந்தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும், தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் பல்வேறு நிதித் திட்டங்களையும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கி வருகிறது.
தமிழ் மொழி, செம்மொழியாக 2004-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு ஜனவரி முதல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எனும் ஒரு தன்னாட்சி நிறுவனம் சென்னை தரமணியில் தமிழ் ஆய்வுக்காகச் செயல்பட்டு வருகிறது.
42 ஆயிரம் நூல்கள்
தொல்பழங்காலம் தொடங்கி கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை முன்வைத்து ஆய்வு, பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளை வரையறை செய்துள்ளது இந்த மையம். இங்கே தொல்பழங்காலம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான 41 இலக்கிய, இலக்கண நூல்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தான் அவை.
இந்த மையத்தின் நூலகத்தில் அரிய நூல்கள் 20 ஆயிரம் உட்பட 42 ஆயிரம் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் செம்மொழி நூல்களின் பழஞ்சுவடிகளையும், அவற்றின் மைக்ரோ பிலிம் நகல்களையும் சேகரிக்க சுவடிக் காப்பகமும் இங்கே உள்ளது.
இணையவழி படிப்பு
சங்க இலக்கியப் பாடல்களில் ஆர்வம் இருக்கும் யாரும் http://www.cict.in –ன் வாயிலாக பாடங்களை இலவசமாகக் கற்கமுடியும். ஆசிரியர்கள் பாடல்களையும் பாடல் பொருளையும் எளிமையாகச் சொல்வார்கள். அகப்பாடல்கள் முழுவதும் பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சீக்கிரத்தில் புறப்பாடல்கள் தொகுக்கப்பட உள்ளன.
முதுகலை மாணவர்களுக்கு
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைச் செம்மொழித் தமிழ் எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் பிற செலவினங் களுக்கும் வழங்கப்படுகிறது.
ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை
சங்க இலக்கிய, இலக்கண நூல்களில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 30 பேர் எடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி இருக்கிறதா என்பதைப் பார்க்க ஒரு தேர்வு நடக்கும். அந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திலும் எந்த வழிகாட்டியின் கீழும் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளைச் செய்யலாம். மாதம் 12 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் பிற செலவினங்களுக்காகவும் வழங்கப்படுகிறது.
முனைவர் பட்ட மேலாய்வு செய்பவர்களுக்கு (இரண்டாண்டு)
மத்தியப் பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலேயே முழுநேர ஆய்வுப்பணியில் ஈடுபடலாம். அவர்களுக்கு வழிகாட்ட பேராசிரியர்களும் உண்டு. இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், கல்வெட்டியல், தொல்பொருளியல், மெய்யியல் ஆகியவற்றில் ஏதேனும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நாற்பது வயதுக்குட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். மாதம் 18 ஆயிரம் :ரூபாயும், இதர செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
குறுகிய கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவித்தொகை
சங்க இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு தனி ஆய்வுத் திட்டங்களைச் சமர்ப்பிக்கும் ஆய்வறிஞர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு நம்மிடம் இதுபற்றிப் பேசும்போது, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செம்மொழி இலக்கியங்கள் தொடர் பாக நடத்தப்படும் கருத்தரங்கங்களுக்கும், பயிலரங்குகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தக் கருத்தரங்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டதன் பலனையும் நேரடியாகப் பார்க்க முடிகிறது. 2008-2009-ல் செம்மொழி இலக்கியம் தொடர்பாக பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. இப்போது 45 சதவீதமாக ஆகிவிட்டது. செம்மொழி இலக்கியங்கள் மீதான ஆர்வம் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் தற்போது அதிகரித்துள்ளது. செம்மொழி இலக்கியங்களில் ஆய்வுசெய்வதற்கான சாத்தியங்கள் ஏராளமாக இருப்பதை இக்கருத்தரங்குகள் வழியாக அவர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்கிறார்.
தொடர்புக்கு:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவன வளாகம், 40,100 அடி சாலை, தரமணி, சென்னை 600113.
தொலைபேசி: 044 – 22540124

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக